மகனதிகாரம்
மகனாய் நீ பிறக்க நானும் -
தவங்கள் ஏதும் செய்ததில்லை,
என் தவமே நீதான் என்பது -
காலம் உணர்த்தும் நான் சொல்வதற்கில்லை...
என் வலி, பாவம், புண்ணியம், கனவு
குறுதி, விந்து, வென்று வந்த அனு
யாதும் நீதான் என்பதை அறிவாய்
நீயும் நான் தான் என்பதை ஒரு நாளும் மறவாய்...
உன் தாய் வழி வந்தாலும் - என் பொருட்டு
என் உயிர் வலி சுமந்த அவளுடலுன் தற்காலிக கூடு...
உன்னுறக்கம் கெடா இரவுகள்...
எம் நல்லுறக்கம் மறந்த நடுநிசி காடு...
பதிலாய் எமக்கு உன் சேவகம் வேண்டாம்,
நல்வாழ்வு சுமந்து அருள்வாழ் போதும்...
நாளை நம் சந்ததி இப்பூமியை நிரப்பும்,
பின்பொருநாள் நம் அனைவரின் பிறப்பின் அர்த்தம் விளங்கும்....
கோபம் வேண்டாம், வெறுப்பும் வேண்டாம்,
புறம் பேசும் நாவும் வேண்டாம், எளியோரை புறம்தள்ளும் இதயமும் வேண்டாம்.
எப்போதும் உன் பொருட்டு ஒருவருக்கும் எக்கேடும் வேண்டாம்...
நினைவில் நிறுத்து -
நன்மை தீமை வெவ்வேறில்லை
காலமும் நேரமும் மாறும்போது,
நன்மை யாவும் தீமையாகும்
தீமை என்பது நன்மையில் முடியும்
நியாயம் அநியாயம் வெவ்வேறில்லை
இக்கரை நிற்ப்பின் அக்கரை பச்சை
அக்கரை நிற்ப்பின் இக்கரை பச்சை
அவரவர் வாழ்க்கை அவரவர் நியாயம்
கடவுள் சாத்தான் வேறுபாடு இல்லை
ஒளியின் பொருட்டு தேவன் அழைத்தால்
இருளில் பொருட்டு சாத்தான் அழைப்பான்...
இருவரும் இணையும் இடம் மனிதன் தன் வழித்தடம் மறப்பான்...
வாழ்வு மரணம் வெவ்வேறு இல்லை
உறங்கிய இடத்தில் விழித்தல் வாழ்தல்
உறங்கி பின் வேறு இடத்தில்
விழித்தல் மரணம் என்றறிக...
நாளை ஒருநாள் நான் மறித்தே போயினும்...
வார்த்தையாய் உனக்குள் வாழ்வேன் பார்...
வலி, துரோகம், துயரம் பழகு -
அயலானுடையதும்
சேர்த்தே சுமப்பின்... வாழ்வே அழகு.
Comments
Post a Comment